தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் 1967-ம் ஆண்டு தேர்தல் மறக்க முடியாத ஒன்று, அந்த ஆண்டு கிங் மேக்கர் காமராஜரே தோல்வியடைந்தார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kamarajar Defeat against DMK : 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அதிரடி மாற்றங்களுக்கு வித்திட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதியது இந்த தேர்தல் தான். இந்தியாவில் மாநிலக் கட்சி ஒன்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சிக்கு வந்ததும் இதுவே முதன்முறை. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியதும் இத்தேர்தலில் தான். இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு திமுக கடும் சவால் தந்தது. காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்கிய நிலையில், முந்தைய தேர்தலை போலவே இம்முறையும் காங்கிரஸுக்கு ஆதரவாக பெரியார், பரப்புரை மேற்கொண்டார்.
எதிர்தரப்பில் திமுக வலிமையான கூட்டணியை அமைத்திருந்தது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக உடன் இணைந்து, தேர்தலை சந்தித்தன. 1965-ல் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் அனல் தேர்தல் பரப்புரையிலும் தெரிந்தது. இன்னொருபுறம் அரிசி தட்டுப்பாடு பிரச்சனை தலைவிரித்து ஆடியது. இச்சூழலில் தான் 1 ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்கிற வாசகத்தோடு, வாக்கு வேட்டையாடினார் அண்ணா.

தோல்வியடைந்த காமராஜர்
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தான் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நடிகருமான எம்ஜிஆர் கழுத்தில் சுடப்பட்டு இருந்தார். இதுவும் இந்த தேர்தலில் திமுகவுக்கு அனுதாப அலையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் பெரும் பூகம்பமாய் அமைந்தது. திமுக 137 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மை பெற்றது. சுதந்திரா கட்சி 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 11 இடங்களிலும் வெற்றி வாகை சூடின. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை பரிகொடுத்தது.
திமுகவின் இளம் வேட்பாளர் சீனிவாசனிடம் இந்தியாவின் கிங் மேக்கர் என பெயர் பெற்ற காமராஜர் 1285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நெடுஞ்செழியன், திருவல்லிக்கேணியிலும், கருணாநிதி சைதாப்பேட்டையிலும், எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியிலும் அமோக வெற்றி பெற்றனர். மேலவை உறுப்பினராக இருந்த அண்ணா, 1967-ம் ஆண்டு மார்ச் 3ந் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். இப்படி தமிழ்நாட்டில் மாற்றங்களுக்கு பாதை அமைத்த தேர்தலாக இந்த 1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


