kerala police started investigation with sayan

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சயானிடம் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபர தமிழக அரசியல் டூவிஸ்ட்டுகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லாத வகையில் நாளொரு வண்ணமும் பொழுதொரு தினமாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிரி புதிரி அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

கொள்ளைக்கு மாஸ்டர் பிளான் போட்ட கனகராஜ் சேலத்தில் விபத்தில் சிக்கிய மறுநாள் அவரது கூட்டாளியாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் பாலக்காடு அருகே காரில் சென்ற போது குடும்பத்தோடு விபத்தில் சிக்கினார்.

இதில் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்க சயான் மட்டும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொடநாடு பங்களாவில் இருக்கும் ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக தமிழக அரசியல் கட்சிகள் பற்ற வைக்க விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

பெரிய இடத்து பிரச்சனை என்பதால் காவல்துறையும் ரொம்பவே மெனக்கெட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டதில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா துருவித் துருவி விசாரணை நடத்தினார். இதன் பின்னர் ஜெயலலிதா பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைக்கடிகாரமும், அலங்காரப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் கணக்கு காட்டினர் போலீஸ்….

சயான் கண்விழித்தால் மட்டுமே வழக்கு வேகமெடுக்கும் என்பதால், அவரின் உடல்நிலையை நிழலைப் போலப் பின்தொடர்ந்து வந்தனர். ஒருவழியாக சயான் உடல் நலன் தேறி தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் லேசில் விட்டுவார்களா மலபார் போலீஸ்.. என்ன? ஏது? என்று சயானிடம் விசாரணை நடத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய அம்மாநில உயர் அதிகாரிகள், சயான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், நல்ல முறையில் பேசி வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கும் படி நோட்டீஸூம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சயான் வாய் திறந்தால்

இன்னும் என்னென்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ……!