கேரளாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலத்திலும், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலாவதாக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

முதலமைச்சரைத் தொடரந்து சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கேரளாவைச் சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ. அப்துல்லா. இவர், மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கி உள்ளேன் என்றும், குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். அப்துல்லாவின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், அவரை சென்னையில் வாக்களிக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ., அப்துல்லா, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.