கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து வாகனங்களில் கோழி, வாத்து, மற்றும் முட்டைகளை தமிழகத்துக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் நோயால் வாத்து மற்றும் கோழிகள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டு வருகின்றன. இதையடுத்து கேரள அரசு, அனைத்து மாவட்டங்களையும் எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளாவில் இருந்து வரும் கோழி, மற்றும் முட்டைகள் மூலம் தமிழகத்திற்குள் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதால், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் எல்லையோர மாவட்டங்களை உஷார் படுத்தியுள்ளார். அதன்படி தேனி கால்நடை இணை இயக்குனர் தலைமையில், டாக்டர்கள் குழுவினர், எல்லை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
அப்பகுதிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். அவைகளில் கோழி, முட்டை இருந்தால் திரும்பி அனுப்புகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து செல்லும் பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கி அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், எல்லையோரமுள்ள கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு வழித்தடங்களில் முகாமிட்டு, அவ்வழியாக வரும் வாகனங்களில் கோழி, வாத்து மற்றும் முட்டைகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு வந்தவுடன் எங்கள் துறை சார்பில் சோதனை சாவடி இயங்கத் துவங்கும். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே வாகன கண்காணிப்பு பணிகளை துவங்கிவிட்டோம்என்றனர்.
