மாமல்லபுரத்துக்கு வந்த கயானா நாட்டு பிரதமர், அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை கண்டு இரசித்தார்.

மாமல்லபுரம் நகரம் பல்லவர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்குள்ள பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

இதனால், மத்திய அரசின் தொல்லியல் துறையினரால் மாமல்லபுரம் சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள் அவ்வப்போது மாமல்லபுரம் வந்து சிற்பங்களை கண்டு இரசிப்பது வழக்கம்.

இந்த நிலையில், கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, தனது மனைவி மற்றும் தூதரக அதிகாரிகளுடன் மாமல்லபுரத்துக்கு புதன்கிழமை வந்தார்.

பின்னர், இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து இரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து இரசித்தார். அப்போது, சிற்பங்களின் சரித்திர குறிப்புகளை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

கயானா பிரதமர் வருகையையொட்டி மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், கோதண்டம் உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.