katju call for protest
சசிகலாவின் கைப்பாவை எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும்…மார்கண்டேய கட்ஜு ஆவேசம்….
சிறைப்பறவை சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்றபோது இளைஞர்களுக்கும் ,மாணவர்களுக்கும் கட்ஜு பெரும் ஆதரவு கொடுத்தார். போராட்டம் மற்றும் அதற்கான தீர்வு போன்றவைகள் குறித்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
சசிகலா- ஓபிஎஸ் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியின்போது சசிகலலாவுக்கு எதிராக கட்ஜு முகநூலில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, பெங்களூரு சிறைப் பறவை சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் வட மாநில உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் ஹிந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது போல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை, அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும்
உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையிலோ அல்லது இதர தென்மாநில நகரங்களிலோ ஏற்படுத்த வேண்டும்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, உரிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும், இன்று முதல் அமைதியாக போராட வேண்டும் என கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கையில் வெள்ளை BAND அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை BAND என்பது போராட்டத்தின் குறியீடு என்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வழக்கறிஞர்கள் அவற்றை நீக்க வேண்டாம் என்றும் மார்கண்டேய கட்ஜு கேட்டுக் கொண்டுள்ளார்.
