kathirmangalam protest for 4th day

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் 7 எண்ணெய் கிணறுகள் அமைத்து, கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. கடந்த வாரம், இங்குள்ள ஒரு குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள், கச்சா எண்ணெய் குழாயை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைய செய்தனர். இந்த போராட்டத்தில் இடுபட்ட 9 பேரை, போலீசார் கைது செய்தனர். இதையாட்டி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சமூக நல அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட சென்ற கிராம மக்கள் 75 பேரை, போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலம் வியாபாரிகள் கடந்த 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இன்று 4வது நாளாக கடையடைப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம், மாதம் ஒரு கோரிக்கையை வைத்து வெவ்வேறு போராட்டங்களாக நடந்து வருகிறது. கதிராமங்கலம் கிராம போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதனால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.