நடிகர் விஜய் கரூரில் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நேற்று (செப்டம்பர் 27) இரவு கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட மிக மோசமான கூட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச் செயலாளர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது மற்றும் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புஸ்ஸி ஆனந்த், மதியழகன் தலைமறைவு?

இந்தச் சூழலில், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. தலைமறைவானவர்களைக் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.