தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க வருகை தந்த விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக தெறித்து ஓடியுள்ளார். கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு ரஜினி வந்து சென்ற பிறகு, விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுந்தது. மேலும் விஜய் தற்போது சன் பிக்சர்சின் தயாரிப்பில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இதனால் விஜய்க்கு படப்பிடிப்பு முக்கியம் ஆனால் கலைஞர் உடல் நிலை முக்கியம் இல்லையா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை விஜய், காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் விஜய் வரும் வழியில் கேமராக்களை வைத்துக் கொண்டு கேமரா மேன்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிய ஆல்டோ ரக கார் ஒன்று அங்கு வந்தது. முதலில் யாரோ வருகிறார்கள் என்று நினைத்து கேமரா மேன்கள் ஒதுங்கினர். ஆனால் உள்ளே உற்றுப் பார்த்த ஒருவர் விஜய் அங்கிருப்பதை கண்டு கொண்டார்.

உடனடியாக செய்தியாளர்கள் ஆல்டோ காரை சூழ்ந்து கொண்டனர். பின்னர் போலீசார் வந்து செய்தியாளர்களை ஒழுங்குபடுத்தி விஜயை உள்ளே அனுப்பி வைத்தனர். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக கார் வைத்துள்ள விஜய் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆல்டோ காரில் வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் வந்து சென்றுவிட வேண்டும் என்றே விஜய் ஆல்டோ காரில் வந்தது பின்னர் தெரியவந்தது.

மருத்துவமனைக்குள் செல்லும் போதே விஜயிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முண்டி அடித்தனர். ஆனால் விஜய் உள்ளே சென்றுவிட்டு வருவதாக கூறினார். இதனால் விஜய் வெளியே வந்து ரஜினியை போல் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயோ மருத்துவமனையில் இருந்து வெகுநேரமாக வெளியே வரவில்லை. என்ன ஆனது என்று செய்தியாளர்கள் விசாரித்த போது தான் விஜய் பின் வாசல் வழியாக சென்றது தெரியவந்தது. செய்தியாளர்களை சந்தித்தால் தேவையில்லாமல் கேள்விகள் எழும், பதில் சொல்ல முடியவில்லை என்றால் சர்ச்சையாகிவிடும் என்ற அவர்களை சந்திக்காமல் விஜய் விட்டால் போதும் என்று ஓடியுள்ளார்.