கார்த்திகை தீப திருவிழா... ஆரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நடைபெற்ற பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நடைபெற்ற பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் காலையில் 6.30 மணிக்கு விநாயகர் தேரோட்டத்துடன் துவங்கியது.
அதிகாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேரினில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து, காலை 6.35 மணியளவில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது. விநாயகர் தேர் நிலைக்கு வந்ததும், பெரிய தேர் எனப்படும் அண்ணாமலையார் தேரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள், பல மாநிங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச்செல்வார்கள். இதற்குப் பின்னால், கடைசியாக சிறுவர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.
மேலும், பொதுமக்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேரோட்டத்தையொட்டி, முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.