Karnataka government refuses to supply water to Tamil Nadu

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் 4 டிஎம்சி தண்ணீர் கூட வழங்க முடியாது என்று கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு திட்டமிட்டபடி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் செயல் திட்டம் ரெடியாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரைவையின் ஒப்புதல் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் என்றும் அதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.

கர்நாடக தரப்பு வழக்றிஞர், கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அரசைக் கேட்காமல் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது என்று கூறியிருந்தார். காவிரி பிரச்சனை குறித்து நாளை உச்சநீதிமன்றத்துக்கு வர உள்ளது. அப்போது, அன்று 4 டி.எம்.சி.தண்ணீர் திறப்பது குறித்து பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தலைமை செயலாளர் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிவரும் நீதிபதிகள் கூறினர்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் 4 டிஎம்சி தண்ணீர் கூட வழங்க இயலாது என்று கர்நாடக அரசு மறுத்துள்ளது. 

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்துக்கு காவிரிநீர் தர கர்நாடகம் அரசு மறுத்து வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் விடும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளதாக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடக அரசு மறுத்துள்ளது, மனிதாபிமானமற்ற செயல் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். 

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு எப்போதும் தயாராக இல்லை என்றும் உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசே மதிப்பதே இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்