தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் களைகட்டியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குவிவது வழக்கம். இதற்காக போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

காணும் பொங்கலான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் காலைமுதலே ஏராளமானோர் குவியத்தொடங்கியுள்ளனர். நேரம் செல்லச் செல்ல பல்லாயிக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வசதிக்காக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. எவரேனும் அலைகளில் சிக்க நேரிட்டால், அதை உடனடியாக கண்காணித்து மீட்கும் வகையில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் மீனவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தயார் நிலையில் படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

பெண்களை கிண்டல் செய்பவர்களை பிடிக்க பெண் போலீசாரும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க போலீசாரும் மாறுவேடத்தில் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் தொலைந்து விட நேர்ந்தால் அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அடையாள பட்டைகள் அணிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கடற்கரை ரோந்து வாகனங்கள், கடலோரக் காவல் படையினர், கடற்படை ஹெலிகாப்டர், உள்ளிட்டவையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம் அருகில் திருப்பப்பட்டு கொடிமரச் சாலை, அண்ணாசாலை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, மணிக்கூண்டு, இராதாகிருஷ்ணன் சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாகச் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.