Kanthagiri Paliyanandanar Murugan Temple - The Temple of Thaapoosam ...
நாமக்கல்
தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள கந்தகிரி பழனியாண்டவர் முருகன் கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா, மயில் வாகனம், காமதேனு, ரிஷபம், யானை போன்ற வாகனங்களில் சாமி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் வழங்கினார்.
நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி காலை 9 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் செய்து, தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.
மலையைச் சுற்றி உள்ள பாதையில் அடியார்கள் முழக்கங்களை எழுப்பியவாறு தேரை இழுத்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் தேங்காய், பழம் வைத்து சாமியை வழிபட்டனர்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடத்தப்பட்டு, சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான அடியார்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
