Asianet News TamilAsianet News Tamil

இறந்தவிட்டதாக பரவிய வதந்தி..விடிய விடிய சாலைமறியல்.. வீடியோ காலில் முடிந்த சம்பவம்..


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில், வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் விடிய விடிய நடைபெற்ற போராட்டத்தை வீடியோ கால் மூலம் ஆட்சியர் ஆர்த்தி முடித்துவைத்துள்ளார்.

kancheepuram protest issue
Author
Kanchipuram, First Published Dec 18, 2021, 5:46 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், வாகனங்கள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் செலவில் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்துள்ளது. அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும் நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

kancheepuram protest issue

அந்த வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று விடுதியில் தரப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை உட்கொண்ட சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே உடல் நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இன்னும் 8 பெண்கள் விடுதி திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள் நிலை குறித்து தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற பெண்கள் கேட்டபோது விடுதி நிர்வாகம் மழுப்பலாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் 2 பெண்கள் உயிரிழந்து விட்டதாக சமுக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவ, ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

kancheepuram protest issue

இதனையடுத்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் வாலாஜாபாத் - செங்கல்பட்டு வழியாகவும் திருவள்ளூர் வழியாகவும் மாற்றி விடப்பட்டன. மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடகள் பகுதியிலும், வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியிலும் விடுதியில் தங்கியுள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவ்வழிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

இதனிடையே சாலை மறியல் சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் , போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். ஏனினும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி என்றும் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஆட்சியர் விளக்கினார். பின்னர், உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்ட ஜஸ்வர்யா மற்றும் கஸ்தூரி ஆகிய பெண் தொழிலாளர்களுடன் தொடர்புக்கொண்டு, அவர்களை வீடியோ காலில் பேசவைத்தார். அதில் அந்த பெண்கள் நாங்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

kancheepuram protest issue

மேலும் விடுதி உணவு விஷமானதாக கூறப்படும் நிலையில் விடுதி காப்பாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதியளித்தார். அவரது அறிவுறுத்தலையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். அதனைதொடர்ந்து அப்பகுதியில் பலமணி நேரமாக முடங்கியிருந்த போக்குவரத்து சீரானது.

Follow Us:
Download App:
  • android
  • ios