நடிகர் திலகம் சிவாஜி  கணேசன், ரசிகர் மனதிலும்,  நடிக்க நினைத்த தமிழர்கள்  மனதிலும் பதிந்தவர் என்றும்  இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திரை உலகில் சிவாஜி கணேசன் செய்த மகத்தான சாதனைகளையும், சேவைகளையும் போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும், சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது சிவாஜிகணேசனுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.  அந்த  சிலைலையை அப்போதைய முதலமைச்சர்  கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில்  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி சிலை அகற்றப்பட்டது. மெரீனாவில் இருந்து சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகையர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹசன் சிவாஜி சிலை அகற்றப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர்.  இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா என தெரிவித்துள்ளார்.