மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்திரை திருவிழா கொண்டாட்டம் : மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 29 தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் திருத்தேரோட்டமும், கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் நடந்து முடிந்தது. இதனையடுத்து நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டார். 

தங்கக்குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர்

நேற்று நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும், அதன் பின்னர் ஆயிரம் பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார். மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

சித்திரை திருவிழா-பாதுகாப்பு பணி தீவிரம்

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரையில் கள்ளழகர்

ஒவ்வொரு வருடமும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது எந்த வண்ணப் பட்டு கட்டி இறங்குகிறாரோ, அதற்கேற்றவாறு அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் இன்று காலை 6 மணியளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது போது ‛கோவிந்தா கோவிந்தா' என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர்.

மொட்டையடித்து நேர்த்திகடனை செலுத்திய பக்தர்கள்

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமர்ந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதனையடுத்து நாளை (மே 13 ஆம் தேதி) மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் மே 15 ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர்மலை நோக்கி கள்ளழகர் புறப்பாடும் நடைபெறும்