"இதே நடவடிக்கை அவர்கள் மீதும் பாயுமா?" கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கும் K.C பழனிசாமி!
K.C Palanisamy : கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி பல கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள், தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் விஷச் சாராயம் தொடர்பாக தற்போது நடைபெறுகிற சட்டமன்ற கூட்டத்ததொடரில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகமனதாக கீழ்கண்ட திருத்தங்களை மேற்கொள்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்..
Annamalai: தமிழகத்தில் கள்ளு கடைகளை கொண்டு வரும் நேரம் இது - அண்ணாமலை கருத்து
விஷச் சாராயம் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்படவேண்டும். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, VAO, ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
அந்த எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும். மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தும்போது பணியிறக்கம் செய்ய வேண்டும். TASMAC கடைகளை ஒட்டோயிருக்கும் அனுமதிபெற்ற பார்களை தவிர வேறு எங்கு மது விற்பனை நடைபெற்றாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் அவர்கள் மீதும் எடுக்கவேண்டும்.
கஞ்சா, குட்கா, Cool Lip மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் இதே நடவடிக்கைகள் பாய வேண்டும். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் உங்கள் ஆட்சியில் தான் இப்படி என்று மாற்றி மாற்றி குற்றச்சாட்டு சுமத்திகொள்வதை தவிர்த்து ஆக்கபூர்வமாக ஒருங்கிணைந்து இந்த திருத்தங்களை நடப்பு கூட்டத்ததொடரில் நிறைவேற்றுவார்களா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார் அவர்.