Double Murder: கள்ளக்குறிச்சியில் கணவன் வெளியூர் சென்ற நேரத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் இருந்ததை அறிந்த கணவன் இருவரையும் கொடூரமாக வெட்டி தலை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் வேலூரில் தலையுடன் சரணடைந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் கல்லூரியில் என்ஜினீயரிங்கும், மூன்றாவது மகள் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொளஞ்சி வசித்து வரும் மொட்டை மாடியில் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலம் கிடப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டது யார் என்று விசாரணை நடத்திய போது கொளஞ்சி மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் தங்கராசுவுக்கும், லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. கொளஞ்சி வேலை காரணமாக வெளியூர் செல்லும் நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் கொளஞ்சிக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார். அப்போது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரழைத்து மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த இருவரையும் கொடுவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். ஆத்திரம் தீராததால் இருவரின் தலையை துண்டித்து கொளஞ்சி சென்றுள்ளார். . கொலை செய்யப்பட்ட இருவரின் தலைகளும் எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே இருவரின் தலையுடன் கொளஞ்சி வேலூரில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் இருவர் தலைத்துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.