எந்த நிகழ்ச்சியிலும், விழாக்களிலும் யார் அன்பளிப்பு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாத கறைபடியாதவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்கிறார் அவரின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே. முகம்மது மீரா முத்து மரைக்காயர்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்காலாமின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே. முகம்மது முத்து மரைக்காயர். இவருக்கு நாளை(5.11-16) 100-வது பிறந்தநாளாகும். தனது பிறந்தநாள் அன்று தனது சகோதரர் அப்துல்கலாம் இல்லாததது குறி்த்து வருத்தங்களுடன் சில விஷயங்களைப் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

என்னுடைய 98-வது பிறந்தநாளுக்கு இங்கு வந்து என்னுடனும், குடும்பத்தாருடன் கொண்டாடிய பசுமையான நினைவுகள் என்னைவிட்டு அகலவில்லை.

அப்போது, என்னிடம் கொடுத்துவிட்டு சென்றதுதான், இந்த மரப்பெட்டி. இதனுள் மனதுக்கு இதமான மணம் தரக்கூடிய அத்தர், சென்ட் பாட்டில்கள் இருக்கின்றன. எனக்கு அத்தர், சென்ட் பூசுவது பிடிக்கும் என்பதால், இதை 100-வது பிறந்தநாளுக்கு பரிசாக இறப்பதற்கு முன் வந்திருந்தபோது கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனால், அதன்பின் இங்கு உயிரற்று சடலமாகத்தான் வந்தார்.
ஒரு முறை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக எனது சகோதரர் அப்துல்கலாம் சென்று இருந்தார். அப்போது மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த மரப்பெட்டியையும், அத்தர், சென்ட் பாட்டில்களையும் அப்தல்கலாமுக்கு அன்பளிப்பாக கொடுத்து, என்னுடைய 100-வது பிறந்தநாளுக்கு கொடுத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால், அப்துல்கலாம் யாரிடமும் எந்த அன்பளிப்பையும் பெறும் குணம் பெற்றவர் அல்ல. தான் அந்த அன்பளிப்பை பெற மாட்டேன் எனக்கூறி், தன்னிடம் இருந்த சிறிய தொகையை முதல்வர் அகிலேஷ்யாதவிடம் கொடுத்துள்ளார்.

அதை முதல்வர் அகிலேஷ் யாதவை பெற மறுத்துள்ளார். பின் நீண்ட வற்புறுத்தலுக்குப்பின், பணத்தை பெற்றால்தான் அன்பளிப்பை ஏற்பேன் என அப்துல்கலாம் கூறியபின், அதை அகிலேஷ் பெற்றார்.
அந்த மரப்பெட்டியும், சென்ட், அத்தர் பாட்டில்களும் தான் இப்போது என்னிடம் உள்ளன. எனது சகோதரர் என்னுடன் இல்லை" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தனது சகோதரர் கலாம் மறைவு குறித்து முத்து மீரா மரைக்காயர் கூறுகையில், " எந்த விதமான மகிழ்சியும் இல்லாமல், ஒருவிதமான சோகத்துடன் எனத் 100-வது பிறந்தநாளை நான் நாளை கொண்டாடப் போகிறேன்.

எனது 100-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என எனது சகோதரர் அப்துல்கலாம் விரும்பினார். ஆனால், எனது பிறந்தநாளுக்கு கூட அவர் இல்லை.
என்னுடைய 98-வது பிறந்தநாளுக்கு இங்கு வந்திருந்த கலாம், குடும்பத்தார் அனைவருடன் நெருக்கமாக இருந்த நினைவுகள் அகலவில்லை. எனது சகோதரர் இறப்பை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், அதைக்கடந்து வரும் தைரியத்தையும் கடவுள் கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் தேறி நலமுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்தார்.
