Asianet News TamilAsianet News Tamil

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரேஷன் கடைகளில் தன்னார்வலர்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் தன்னார்வலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

Kalaignar women rights cash tn govt allows to appoint Volunteers in ration shop
Author
First Published Jul 10, 2023, 1:46 PM IST

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை திட்டம் மட்டும் தாமதமானது, ஆனால், இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்படி, இந்த திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமை தொகை தொடர்பாக, பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. யாரெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விசிக வரவேற்கிறது - திருமாவளவன்

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் தன்னார்வலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், நியாய விலைக்கடைகளில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற சிறப்பு முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளை கண்டறியும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக்கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios