கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மீண்டும் விண்ணப்பிக்க உதவி மையம்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு உதவ உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அன்றைய தினமே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 18ஆம் தேதி (நேற்று) முதல் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதாவது, விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?
மேலும், விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவும் பொருட்டு உதவி மையங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கியுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், விண்ணப்பம் ஏற்கப்பட்டும் ரூ 1000 உதவித்தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, எந்த ஆவணங்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றையும் இந்த உதவி மையங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி காரணங்களை தெரிந்து கொள்ள முடியும்.