கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இன்று நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க இருந்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வருகை ரத்தானதையடுத்து, அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மற்றும் பீகார் மாநில அமைச்சர் சஞ்சய் குமார் ஜா ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கோட்டம் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்...! முதலில் இதை கவனியுங்கள்... 4 அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாளை திமுகவினர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திருவாரூர் அடுத்த காட்டூரில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்தது. மேலும், கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.