வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை, அடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அரசு உதவியை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே சோழபாண்டிபுரம் எனும் கிராமத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த சவரிமுத்துவின் மகள் அந்தோணியம்மாள். மதுரை யாதவர் கல்லூரியில், எம்ஏ தமிழ் 2-ம் ஆண்டு படித்து வரும் இவர், அண்மையில் வியாட்நாமில் நடந்த சர்வதேச பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார்.
அடுத்து நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்காக தங்கம் வெல்வதே லட்சியம் என்கிறார் அந்தோணியம்மாள். இருப்பினும் இப்போட்டியில் பங்கேற்க பொருளாதார ரீதியில் சிரமமாக உள்ளதாகவும், இதற்காக அரசின் உதவியை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பீச் கபடி போட்டிகளில் தங்கம் வென்ற போதிலும், அரசின் உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அந்தோணியம்மாளின் பெற்றோர். இந்திய அணியில் பங்கேற்று தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற லட்சிய உணர்வுடன் காணப்படும் அந்தோணியம்மாளுக்கு தேவையான உதவிகளை அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
