வெள்ளுடை, தொப்பி என்றாலே பொதுவாக நம் அனைவரின்  நினைவுக்கும் வருவது சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன்தான். அப்படி ஒரு ஒழுக்கம், தமிழ் மீது அளவு கடந்த பற்று, நேர்மை என பலவற்றுக்கு உதாரணமாக சொல்லும் ஒரு மனிதர்தான் க.ப.அறவாணன்.

9 ஆகஸ்ட் 1941-இல் நெல்லை மாவட்டத்திலுள்ள கடலங்குடி எனும் ஊரில் பிறந்த அறவாணன், வெள்ளை ஆடைகள், தொப்பி என வித்தியாசமான தோற்றத்துடன் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தவர்.

நீண்டகாலமாக தமிழர் வரலாறு, சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் உலகில் உரைகள் வழங்கியும், நூல்கள் எழுதியும் வந்தார். இதுவரையில் சுமார் 56 நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்.

சென்னை மற்றும்  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழங்களில் அறவாணன் துணை வேந்தராக பணியாற்றி  வந்துள்ளார்.

மேலும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் அறவாணன் பணியாற்றி வந்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். அண்மைக்காலமாக உடல் நலம் குன்றி இருந்த அறவாணன் இன்று அதிகாலை அரணமடைந்தார்.