சேலம்

கத்தரி வெயில் தொடங்கியதால் சேலத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் வருத்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்தமுறை வெயில் சுட்டெரித்து வாட்டி வதைக்குமாம். அதிலும், சேலம் மாவட்டம் சாதாரண நேரத்திலேயே வெயில் மண்டையைப் பொளக்கும். இப்போ கத்தரி வெயில் வேற சொல்லவா வேணும்.

இங்கு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் இரவில் வீடுகளில் மக்கள் தூங்கமுடியா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதைக்குட்பட்டு வருகிறார்கள். பகலில் அடிக்கும் வெயிலால் உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்கியது. இது வருகிற 28–ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், பகல் வேளையில் வழக்கத்தை விட கடுமையாக வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக வெயில் 106 டிகிரியை தொட்டுள்ளது. ஆனால், நேற்று 101.2 டிகிரிதான் வெயில் பதிவாகி இருந்தது.

அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயில் காரணமாக பகலில் இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே உள்ளது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்பு  சாறு, நுங்கு, மோர், கம்மங்கூழ் இயற்கை பானங்களை பருக வேண்டும் என்று ஆட்சியர் முதல் அரசாங்கம் வரை அட்வைஸ் பண்றாங்க. தயவு செய்து கேளுங்க! ஏன்னா! இந்த முறை வெயில் வருத்தெடுக்கும்.