மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் புதிய இடத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்போவதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலானது முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள தூண் தான் தீபத் தூண். அங்கு தான் தீபம் ஏற்றப்பட வேண்டுமென இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றலாமென உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன் உத்தரவிட்டார்.

ஆனால் நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் அசாதாரண சூழல் ஏற்படலாமென்பதால் அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. மேலும் நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் கேகே ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு தெரிவித்துள்ளது.