கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஒரு மாத போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவு.
Judge gives bizarre sentence to boy who caused car accident : அதி வேகமாக பைக் ஓட்டுதல், பைக் சாகசம், இளம் வயதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு நீதிமன்றம் வினோதமான தண்டனை வழங்கும். அந்த வகையில் சென்னையில் கடந்த ஆண்டு பைக் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்திய மாணவர் ஒருவருக்கு மருத்துவமனை விபத்துகால அவசர பிரிவில் உதவியாளராக பணி புரிய உத்தரவிட்டது. இது போன்று பல வினோத உத்தரவுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஏராளமான ஆடுகள் மாடுகள் உள்ளது. அந்த வகையில் 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி போட்டு அந்த பகுதியை சேர்ந்தவர் வளர்த்து வந்துள்ளார். 300 ஆடுகளை மேய்க்கும் பணியில் ரவி உட்பட இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காளப்பட்டி சாலையில் ஆடுகளை மேய்த்தலுக்கு ரவி கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டு கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் 12க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது. ஆடுகள் மேய்க்கச் சென்ற ரவி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கோவை மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரை ஓட்டி சென்றது 17 வயது சிறுவன் என கண்டறியப்பட்டது. அந்த சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, ஒரு மாதம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அந்த சிறுவன் கோவை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சிறுவனை காரை ஓட்ட அனுமதித்த அவனுடைய உறவினர் மற்றும் அந்த காரின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்