Judge Arumugamasi Commission has sent 60 persons to interrogate Jayalalithaas death.

ஜெயலலிதா மரணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 60 பேருக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

சம்மன் அனுப்பப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட முடியாது எனவும் பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை வெளிகொண்டுவர வேண்டும் எனவும் தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அரசுக்கு 3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் அரசு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகின்றார். இதுவரை 25 பிரமாண பத்திரங்கள், 70-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளன. 

இதனையடுத்து அரசு மருத்துவர்கள் 2 பேர் நேரில் ஆஜராக கடந்த சில நாட்களுக்கு முன் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. 

திமுக டாக்டர் சரவணன் சமீபத்தில் ஆஜராகி, ஜெயலலிதா இறந்த பிறகே அவரிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது என தெரிவித்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பி இன்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.