கரூர்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை 1332 பெண்கள் உள்பட 1815 பேரை காவலாளர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைந்து எட்டாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

Image result for jacto  jio protest

 

அதன்படி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

கரூர் மாவட்டத்தில், தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைப்பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வதுரை, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Image result for jacto  jio protest

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று கரூர் பேருந்து நிலையம் அருகே கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் மேற்கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் கரூர் நகர காவலாளர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதேபோன்று, குளித்தலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Image result for jacto  jio protest

கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் குளித்தலை தாலுகா அலுவலகம் முன்பு திருச்சி - கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த குளித்தலை காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பெண்கள், ஆண்களை தனித்தனியாக திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

கடவூர் ஒன்றியம், கிருஷ்ணராய புரம், அரவக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த 1332 பெண்கள், 483 ஆண்கள் என மொத்தம் 1815 பேரை காவலாளர்கள் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.