புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகள் வரும் 7-ம் தேதி திங்கள்கிழமை முதல் முன்பதிவின்றி நேரடியாக மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார். 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகள் வரும் 7-ம் தேதி திங்கள்கிழமை முதல் முன்பதிவின்றி நேரடியாக மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் கொரோனா பரவல் காரணமாக, வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு முன்பதிவு மற்றும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமுகைளை ஜிப்மர் நிர்வாகம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நேரடி சிகிச்சைகளை தொடங்க வேண்டுமென வலியுறுத்தினர். 

மேலும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, பொதுமக்கள் பாதிப்பு அடையும் அளவிற்கு புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடக்கூடாது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், வரும் 7-ம் தேதி திங்கள்கிழமை முன்பதிவின்றி வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் நேரடியாக வரலாம் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று (பிப். 5) வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளுக்கு அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் வரும் 7-ம் தேதி முதல் தளர்த்தப்படுகின்றன.

நோயாளிகள் முன்பதிவு இன்றி நேரடியாக வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு வரலாம். முன்பதிவு மற்றும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் வரும் 7-ம் தேதி முதல் நிறுத்தப்படும். நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தேவையான அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதாவது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவைகளை இது குறிக்கும். நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் ஏற்கெனவே தடுப்பூசி போடவில்லை என்றால், கொரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டுக்கு எதிராக கூட பாதுகாப்பை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.