கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் பைக்கிள் சென்ற காவல் உதவி ஆய்வாளரின் மகளிடம் அவரது கண்முன்னே  மர்ம நபர் நகை பறித்து சென்றார். திருடன் திருடன் என்று அலறிய போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெள்ளிங்கிரி. இவர் குடும்பத்துடன் காவல் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மகள் லாவண்யா (26). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

லாவண்யா விடுமுறையில் கோயம்புத்தூருக்கு வந்திருந்தார். அவர் நேற்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது வெள்ளிங்கிரி பணிக்கு செல்வதற்காக தனது காவல் சீருடையை அணிந்து கிளம்பிக் கொண்டிருந்தார்.

பின்னர் அவர் தனது மகளை இரயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு பாலசுந்தரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அங்கு வேகத்தடை இருந்ததால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை வெள்ளிங்கிரி குறைத்தார்.

அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளிங்கிரி திருடன் திருடன் என்று சத்தமிட்டபடி அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார்.

அதிகாலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் நகைபறிப்பு கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே கோயம்புத்தூர் நகரம் முழுவதும் காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும், நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்கமுடியவில்லை.

நகை பறிப்பு ஆசாமி ஹெல்மெட் அணிந்து கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வந்தான். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.