jewellery traders shut shops in honour of slain inspector

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீஸாரும் காயம் அடைந்தனர்.

பெரியபாண்டியின் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர், பெரியபாண்டியின் உடல்
அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. பெரியபாண்டிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று மூடப்பட்டன. மேலும் பெரியபாண்டியனின் உருவப்படத்துக்கு, நகை வியாபாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியபாண்டிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள நகைகடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் சங்கத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் அடைக்கப்பட்டு உயிரிழந்த பெரியபாண்டிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடை முன்பு, வீரமரணம் அடைந்த பெரிய பாண்டியின் புகைப்படத்துக்கு அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பெரியபாண்டியின் குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்ய தயாராக உள்ளதாகவும் ராஜஸ்தான் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை விரைவில் பிடித்து தண்டனை அளிக்குமாறும் ராஜஸ்தான் அரசை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.