jeppiyar family property issue

ஜேப்பியார் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டு அவரது மகள் தனது தாயாருக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் தான் வாழ்ந்த இல்லத்தில் தொடர்ந்து வசிக்கவும், பாதுகாப்பு கேட்டும் புகார் அளித்துள்ளார். 

எம்ஜிஆர் ஆட்சியில் அதிமுக மாவட்ட செயலாளராகவும் பின்னர் கல்வி குழுமங்களின் தலைவராகவும் இருந்தவர் ஜேப்பியார். அவரது இரண்டாவது மகள் ஜேப்பியார் ஷீலா, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று கமிஷனர் அலுவலகம் வந்த அவர் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், எனது தந்தை ஜேப்பியார் இறந்த பிறகு, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக தனது தாயார் ரெமி பொறுப்பேற்றுக் கொண்டார் . அறக்கட்டளையில் நான் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை வகித்து வந்தேன். இந்த நிலையில், அறங்காவலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று எனது தாயார் கூறினார். அதற்கு மறுப்பேதும் கூறாமல் அந்த பதவியை ராஜினாமா செய்தேன்.

இதையடுத்து, ஜேப்பியாரின் மற்ற வாரிசுகளுக்கு என்ன உரிமை வழங்கப்பட்டுள்ளபடி எனக்கும் வழங்கும்படி கேட்டேன். அதற்கு எனது தாயார் ரெமி முறையான பதில் அளிக்கவில்லை. மேலும், என்னை வீட்டுச் சிறையில் வைத்தார்கள்.
என்னை அடியாட்கள் மூலம் மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

தற்போது, நான் நண்பர்கள் உதவியுடன்,வேறு முகவரியில் தங்கி இருக்கிறேன். ஜேப்பியாரின் சொத்துக்களில் எந்த உரிமையும் கோரக் கூடாது என்ற குடும்பத்தாரின் சதி காரணமாக தற்போது நான் வெளியேற்றப்பட்டுள்ளேன். எனவே, எனது தந்தை ஜேப்பியார் வாழ்ந்த இல்லத்தில் தொடர்ந்து வசிக்க எனக்கு உதவுங்கள் என்று கேட்டுள்ள அவர் , உரிய பாதுகாப்பு வழங்கவும் புகாரில் கூறியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,பின்னர் கல்வி குழும தலைவராகவும் திரண்ட சொத்துக்கு அதிபராகவும் இருந்த ஜேப்பியாரின் குடும்பத்திலேயே சொத்து பிரச்சனை ஏற்பட்டு மகளே தாய்க்கு எதிராக பாதுகாபு கேட்டு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.