தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷணன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதற்காக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று டெல்லி சென்றார். அவருடன் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு முறை டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினர். இந்த நிலையில் இன்று மீண்டும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை, அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.