ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி தொண்டர்களை மீளாதுயரில் விட்டுவிட்டு மறைந்து சரியாக இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம் 22 இரவு தொண்டர்களிடையே அதிர்ச்சி தரும் செய்தி பரவுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதே அது.

கவலையுடன் அப்போலோ முன்பு இரவு முழுதும் காத்திருந்த தொண்டர்களுக்கு முதல்வருக்கு சாதாரண காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் உள்ளது, ஓரிரு நாளில் வீட்டுக்கு திரும்புவார் என்று அப்போலோ சார்பில் கூறப்படுகிறது.

ஆனால் வாரம் முழுதும் கடந்த பின்னரும் முதல்வர் இல்லம் திரும்பவில்லை. மீண்டும் அப்போலோ அறிக்கை, அமைச்சர்கள் , செய்தி தொடர்பாளர்கள் அம்மா நன்றாக இருக்கிறார், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார் , கோப்புகளை பார்த்தார், டிவி பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் அதை நம்பிக்கை குறைவுடனே தமிழக மக்கள் ஏற்றனர். 

காரணம் முதல்வர் பற்றி மற்றவர்கள் தான் சொன்னார்களே தவிர போட்டோவோ வேறு எந்த தகவலோ இல்லை. இந்நிலையில் கவர்னர் திடீரென விஜயம் செய்தார். அவரும் முதல்வரை பார்க்கவில்லை மருத்துவர் சொன்னார் நன்றாக இருக்கிறார் என்றார். 

திருமாவளவன் முதன் முதலில் அப்போலோ சென்றார், அவரும் வெளியே வந்து மருத்துவர்கள் சொன்னார் நலமாக இருக்கிறார் என்றார், பின்னர் வரிசையாக எதிர்கட்சித்தலைவர்கள் , மத அமைப்பினர் என தினந்தோறும் பலரும் அப்ப்போலோவுக்குபடையெடுத்து பேட்டி அளித்தனர். 

முதலவ்வர் இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டு ஓபிஎஸ் கூடுதல் பொறுப்புகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் உடல் நிலையை பரிசோதிக்க தீவிர சிகிச்சை நிபுணர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் வந்தார். எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர்.

ஒருநாள் திடீரென்று முதல்வருக்கு நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு  சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டி உள்ளது எஅன அப்போலோ அறிக்கை விட்டது. பின்னர் உடல் நலம் தேறி வருகிறார் என்ற நல்ல செய்தி வந்தது. 

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்தார். செயற்கை சுவாசத்துக்காக ட்ரக்யோஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது , சிங்கப்பூர் மருத்துவர்கள் , பிசியோ தெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அப்போலோ குழும தலைவர் பேட்டி அளித்து தெம்பூட்டினார்.

பல இடங்களில் பேட்டி அளித்த பிரதாப் சி ரெட்டி முதல்வர் பூரண குணமடைந்துவிட்டார் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு செல்லலாம் என்றார். டிசம்பர் 8 அல்லது 9 தேதிகளில் இல்லம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

 இந்நிலையில் தான் அந்த செய்தி திடீரென பராவியது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பீதிக்குள்ளாகினர். டிச. 4 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இரவு 7.30 மணிக்கு மருத்துவமனை முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்பு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முதல்வருக்கு மாரடைப்பு என்று அறிவித்தது. ஆனாஅலும் பிரச்சனை இல்லை என்று கூறினர்.

மஹாராஷ்டராவிலிருந்து கவர்னர் அவசர அவசரமாக அப்போல்லோவுக்கு இரவு 11.30 மணிக்கு வந்து முதல்வரை பார்த்தார். அன்றிரவு முழுதும் விடிய விடிய தொண்டர்கள் அப்போலோ முன்பு பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். 

காலையிலிருந்து ஒருவித பதற்றமான சூழ்நிலை உருவானது. அனாஇவரும் எதையோ எதிர்ப்பார்த்து துக்கத்துடன் இருந்தனர். சுனிதா ரெட்டி திடீரென டுவிட்டரில் முதல்வர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று பதிவு செய்தது தொண்டர்களை கலக்கமடைய செய்தது. 

எக்மோ எனப்படும் உயிர்காக்கும் அவசர சிகிச்சையில் உள்ளார் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. எக்மோ என்பது கடைசி முயற்சி என சூசகமாக உணர்த்தப்பட்டது. திடீரென ரிச்சர்டு பேல் தனது டுவிட்டரில் தங்களால் இயன்ற முழு சிகிச்சையும் முதல்வருக்கு அளித்தோம் ஆனாலும் நிலைமை திடீரென சிக்கலாக உள்ளது என்ற பொருள் பட வெளியிட்டது மேலும் அதிர்ச்சியை எழுப்பியது. 

மதியத்துக்கு மேல் சுனிதா ரெட்டி மீண்டும் டுவிட்டரில் முதல்வரை காப்பாற்ற போராடுகிறோம் ஆனாலும் நம்பிக்கை உள்ளது என்று தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசுக்கு தகவல் சொல்லப்பட்டது. பிரதமர் வெங்கய்யா நாயுடுவை அப்போலோ அனுப்பினார் , எய்மஸ் மருத்துவர் குழு மதியம் 3 மணிக்கு மேல் சென்னை வந்தது.

அமைச்சரவை கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டது. அப்போலோவில் அனைத்து எம்.எல்.ஏக்கள் குவிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிக கவலை அடைந்தனர். 

அப்போதுதான் மாலை 5.30 மணி அளவில் அந்த பேரிடி இறங்கியது. குறிப்பிட்ட தொலைக்காட்சி முதல்வர் மரணமடைந்தார் என்று திடீரென அறிவித்தது. அதை தொடர்ந்து பெரும்பாலான சானல்கள் அடுத்தடித்த நிமிடங்களில் மரணத்தை உறுதிபடுத்தின. அப்போலோ வாசலில் தொண்டர்கள் கதறினர். 

பதற்றமான சூழ்நிலை உருவானது . லேசான தடியடியும் நடத்தப்பட்டது. போயஸ் கார்டனில் தொண்டர்கள் குவிந்தனர். திடீரென தவறான செய்தி என அப்போலோ அறிவித்தது. தொலைக்காட்சிகள் தவறாக சொன்னதாக மன்னிப்பு கோரின. முதல்வர் தீவிர சிகிச்சையில் தான் உள்ளனர் என்று கூறினர்.

ஆனாலும் தொண்டர்கள் ஒருவித மனநிலைக்கு வந்தனர். தங்கள் தலைவிக்கு என்ன ஆயிற்று என்று கவலையுடன் இருந்தனர். தடியடி நடத்தப்பட்ட அப்போலோவில் தொண்டர்கள் கலிந்தவுடன் போலீசார் குவிக்கப்பட்டனர். துணை ராணுவப்படை வந்தது. வெங்கய்யா நாயுடுவந்தார். பின்னர் அவரும் வெளியேறினார்.

 இரவு 11.00 மணிக்கு முதல்வர் அப்போலோவிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் போயஸ் இல்லம் அழைத்து செல்லப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அவசர அமைச்சரவை கூட்டமும் நடந்தது, தொண்டர்கள் போயஸ் இல்லத்தில் குவிந்தனர். இரவு 11.30 மணிக்கு  மீண்டும் அந்த பேரிடி தொண்டர்கள் தலையில் இறங்கியது முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என்று அறிவிப்பை அப்போலோ வெளியிட்டது. 

தொண்டர்கள் அழுது புலம்பினர். உடனடியாக அதற்கு முன்னரே ஓபிஎஸ் பதவி ஏற்றிருந்தார். சென்னை முழுதும் பதற்றம் ஏற்பட்டது. தமிழகமே சோகத்தில் மூழ்கியது. அடுத்து இறுதி நிகழ்ச்சி பற்றி பேசப்பட்டது. ஜெயலலிதா உடல் நள்ளிரவு 2.30 மணி அளவில் முதல்வரின் அதே கான்வாய் அணிவகுப்புடன் போயஸ் இல்லம் கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது உடல் கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்கு கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். 

வழக்கமாக காரின் முன் இருக்கையில் அமர்ந்து மலர்ந்த சிரிப்புடன் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி செல்லும் முதல்வர் அன்று கண்மூடி மீளாத்துயரில் தொண்டர்களை ஆழ்த்தி உயிரற்ற உடலாய் தனது இறுதி பயணத்திற்காக கொண்டு செல்லப்பட்டார்.

முதல்வர் மறைந்து 30 நாளில் எவ்வளவு அரசியல் மாற்றங்கள், இன்றும் அவர் இருப்பது போன்ற நினைவே தொண்டர்களுக்கு உள்ளது.