முதல்வர் ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு அளிக்கவேண்டிய பதுகாப்பு குறித்து கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் கடந்த 6-ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று இரவு முழுவதும் விடிய, விடிய அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து மூன்றாவது நாளாக தொண்டர்கள் , பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் சமாதியில் கூட்டம் அலைமோதுகிறது. அஞ்சலி செலுத்த வரும் பெண்கள் சிலர் நெடு நேரம் நிற்பதால் மயங்கி விழுகின்றனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
3-வது நாளாக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செய்வதற்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர் . மாலை மற்றும் மலர்களை ஜெயலலிதா சமாதியில் தூவி அஞ்சலி செலுத்தினர். வெளிமாநிலங்களிலும் இருந்து ஏராளமானோர் வந்து இருந்தனர். ஆண்கள், பெண்கள் பலர் மொட்டையடித்தனர். கூட்டம் அதிகமாகி கொண்டே போனதால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் உணவு, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று திடீரென எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஆய்வு செய்தார்.
அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ஜார்ஜ் , ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், மக்கள் திரண்டு வருகிறார்கள். இதனால் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தோம். வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
