மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து 29-ம் தேதி மாலை 7 மணி முதல் 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தார்.பிறகு அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த 75 நாட்களில் பலபேர் பார்த்தாகவும், வீடியோ பதிவு செய்ததாகவும் ஆணையத்திடம் சாட்சியகங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று ஆணையத்தின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனையடுத்து இன்று ஒரு முக்கிய உத்தரவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பிறப்பித்தது. அதில் வரும் 29-ம் தேதி பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின் 7 மணி முதல் 45 நிமிடங்கள் வழக்கறிஞர்கள் குழு இந்த ஆய்வை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.