மறைந்த முதல்வர், ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறையினர் துவக்கியுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் 6ம் தேதி ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடத்தின் ஒரு பகுதியில், ஜெயலலிதா உடல், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 9 அடி நீளம், 6 அகலம், 6 அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டு, ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது; தற்போது மழை காலம் என்பதால், தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை கட்டட பிரிவு உயர் அதிகாரிகள், ஜெயலலிதாவின் சமாதியை பார்வையிட்டனர். அஞ்சலி செலுத்த வருபவர்கள் யாரும் சமாதியை சேதப்படுத்தாமலிருக்க, தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, தற்காலிக நினைவிடத்தை பராமரிக்க, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, எம்ஜிஆர் நினைவிடம், செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த துறை நிதி ஒதுக்கிய பிறகு, ஜெயலலிதாவுக்கு நிரந்தர நினைவிடம் அமைக்கப்படும். அதற்கான ஆய்வு தற்போது நடந்து வருகிறது என்றார்.