அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சந்திர பிம்பம் போல் முன்னேற்றம் அடைந்து வருகிறார் என அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர், பல்வேறு கோயில்களில் பூஜைகள், பரிகாரங்கள், யாகங்கள் நடத்தி பூஜைகள் செய்து வருகின்றனர். இதில் தேர் இழுப்பது, அலகு குத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்பது உள்பட பல்வேறு வேண்டுதல்களையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலோ மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர், மருத்துவமனையிலேயே முகாமிட்டு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் பிசியோ தெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் முதலைமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைந்து வருவார் என கூறினார்.
