ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். இதுவரை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத விஜயபாஸ்கர் இன்று முதல் முறையாக ஆஜராகியுள்ளார். 

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இதுவரை முன்னாள் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதா உறவினர்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அதன்பின்னர் 4-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ஏற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.