முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலானவர். அவருக்கு எந்த நோயும் நெருங்காது. பூரண குணமடைவார் என நடிகர் விஜயகுமார் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
நடிகர் விஜயகுமார், நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின், சிகிச்சை குறித்து விசாரிக்க சென்றார். அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். எனது நண்பர் ரஜினிகாந்த் சொல்வதைப்போல், கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து, போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்வார். அங்கிருந்து லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
