தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 4 நாட்களாக குடிநீர், உணவு இல்லாமல் பனியிலும், வெயிலிலும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள், வாலிபர்கள், இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு மாநிலத்தவர்களும், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார், ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்காத பட்சத்தில், கடந்த ஆண்டு அவர் பெற்ற யுவபுரஸ்கார் விருதை மத்திய அரசிடம் திரும்ப கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது :-

இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக சிறு சிறு குழுக்களாக மக்கள் போராடினாலும் அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன. இன்று மொத்த தமிழ் சமூகமும் திரண்டு தம் உரிமைக்காக குரல் கொடுப்பது தற்செயலானதாய் நடந்தது அல்ல.

இது வெறுமனே ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கான போராட்டமும் அல்ல. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம் என்பதன் அழுத்தத்தில் வெளிப்பட்டிருக்கும் கோவம். 

ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AwBI மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த பெருந்திரளான சமூக எழுச்சியில் கூட்டத்தில் ஒருவனாகவே என்னயும் உணர்கிறேன்.

இன்று மாலைக்குள் இணக்கமான எமக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்காத பட்சத்தில் சாகித்ய அகதெமியிலிருந்து வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை நாளை காலை பதினோறு மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகதெமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன்.

இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக நடக்கட்டும்.
நன்றி
லஷ்மி சரவணகுமார்.