மெரினா போராட்டக்களத்தில் போராடும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் அரசின் கோரிக்கையையும் பதியவைக்கும் துணிச்சலான அதிகாரி என மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பெயரெடுத்துவிட்டார்.
காவலர்கள் மத்தியில் இன்று ஒரே பெயர் பெருமையுடன் உச்சரிக்கப்படுகிறது. அதுதான் தில்லுதுரை. அதற்கு சொந்தமானவர் துணிச்சல்மிக்க ஐபிஎஸ் அதிகாரி மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தான். மதுரையில் எஸ்பியாக இருந்த போது அலங்கா நல்லூர் , பாளமேடு ,அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை திறம்பட நடத்தி காட்டிய அனுபவம் மிக்கவர்.

சட்டம் ஒழுங்கில் ஐபிஎஸ் அதிகாரியின் பணி பற்றி பயிற்சி அளிக்கப்படும் அதை பல அதிகாரிகள் கடைபிடிப்பதை காலப்போக்கில் மறந்து விடுவார்கள். மக்களால் நான் மக்களுக்காக நான் என்றால் அது போலீசாருக்குத்தான் பொருந்தும். அதை மனதில் வைத்து செயல்படும் அதிகாரிகளில் பாலகிருஷ்ணனும் ஒருவர் .
காவல் பணி என்பது மக்களுடன் கலந்து சட்டம் ஒழுங்கை பேணுவது மக்களை சமூக அக்கறை உள்ளவர்களாக காவல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக மாற்றுவது என்பதை பல ஐபிஎஸ் அதிகாரிகள் நடைமுறைப் படுத்தினர்.

சென்னை காவல் ஆணையராக இருந்த விஜயகுமார் இதே எண்ணத்துடன் காவல் நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கினார். குடிசைப்பகுதிகளில் , குடியிருப்பு பகுதிகளில் இளஞ்சிறார்களை காவலர்களுக்கு உதவும் நல்லெண்ணம் மிக்கவர்களாக மாற்ற போலீசாருடன் இணைந்து செயல்பட பயிற்றுவித்தார்.

இது லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பேருதவியாக அமைந்தது. இதை இன்றும் அடிமட்ட காவலர்கள் பாராட்டி வருகின்றனர், ஆனால் அதன் பின்னர் வந்த அதிமேதாவி ஐபிஎஸ் அதிகாரிகள் அதை சிதைத்தனர். அதன் விளைவு இன்று சாதாரண குடிசை பகுதியில் இளஞ்சிறார்கள் கூட போலீசுடன் அந்நியப்பட்டு நிற்கின்றனர்.

போலீஸ் மக்கள் பணியில் மக்களோடு என்பதை பல ஐபிஎஸ் அதிகாரிகள் தவிர்த்து அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளும் திறம்பட தானாக முன் வந்து நடத்தி காண்பித்துள்ளனர். பொங்கல் விழா, இளைஞர் விழா, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவது என்பதை வழக்கமாக வைத்துள்ள அதிகாரிகள் உள்ளனர்.
அந்த வகையில் தயாரான ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆவார். தமிழ் கலாச்சாரம் , ஜல்லிக்கட்டு பற்றி நேரடியாக களம் கண்ட அதிகாரி. மாணவர்கள் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் கடற்கரையில் கூடியபோது அவர்களை கண்டு சந்திக்க திராணி இல்லாத உயர் அதிகாரிகள் மத்தியில் அந்த பகுதியின் துணை ஆணையர் என்கிற விதத்தில் முதல் நாளே இளைஞர் கூட்டத்தின் உள்ளே சென்று பேசினார்.

கேலி கிண்டல் செய்து அடக்கி விடலாம் என்று சில விஷமிகள் முயன்ற போது அதை சமாளித்து பேசிவிட்டு வந்தார். மறுநாள் மேடை மீது ஏறி மைக் பிடித்து முதல்வரின் கோரிக்கையை அறிவிக்கும் தூதராக செயல்பட்டபோது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் , தண்ணீர் பாக்கெட்டுகளை தூக்கி எரிந்தனர்.
ஆனால் அதற்கு ஐபிஎஸ் பாலகிருஷ்ணன் அளித்த பதிலால் அதன் பின்னர் ஒரு சிறு காகிதத்தை கூட இளைஞர்கள் தூக்கி எரிய முன் வரவில்லை. கனிவு ,கண்டிப்பு கலந்த குரலில் உங்களை போல் எனக்கும் எரிய தெரியும் ஆனால் நாம் அதற்காக கூடவில்லை , தண்ணீர் பாட்டிலை என் மீது எரிவதும் ,பாக்கெட்டுகளை என் மீது எரிவதும் தமிழர் வீரமாக கருதப்படாது என்று கூறிய வார்த்தைகள் அவர்களை கட்டிப்போட்டது. கரவொலி எழுப்ப வைத்தது.

இன்றும் முதல்வரின் அறிக்கையை அரசின் தூதராக ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனே படித்தார். கூட்டத்தை பேச்சுவன்மையால் கட்டிப்போட்டு , அரசின் முடிவையும் உறுதியாக சொன்ன ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் ஒரே நாளில் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார், போலீசார் சொல்வது போல் உண்மையிலேயே தில்லு துரை தான். - முத்தலீஃப்
