தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா , விலங்குகள் நலவாரியம் தனித்தனியாக இடைக்கால மனு செய்துள்ளன. இது ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை உச்சநீதிமன்றம் விதித்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய அரசும் தடை கொண்டு வந்தது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்காத நிலையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லை என்று மத்திய அரசு கைவிரித்தது.
இதனால் ஆவேசமுற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் , இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்தது. மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டத்தை கண்டு இறங்கி வந்த மாநில , அரசும் மத்திய அரசும் அவசர சட்டத்தை கொண்டு வந்தன.

இந்த சட்டத்தை சுற்றுச்சூழல் , சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் வழிப்படுத்தி ஜனாதிபதிக்கு அனுப்ப அது சட்டமானது. பின்னர் அது சட்டசபையில் அவசர சட்டமாக தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.
தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கொண்டு வந்த சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் அந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பீட்டாவும் , விலங்குகள் நல வாரியமும் தனித்தனியாக இடைக்கால மனுவை தாக்கல் செய்தன.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா , பானுமதி அமர்வு முன்பு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி மற்றும் பீட்டாவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரமும் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது , அவர்கள் கோரிக்கையில் 2016 ஜனவரி பிறப்பித்த அறிவிக்கையை மத்திய அரசு வாபஸ் வாங்குவதாக தெரிவித்த மனு பற்றி ஆட்சேபணை இல்லை , ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கும் போது தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் ஏற்றுகொள்ள முடியாதது . அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு அனுமதி அளித்த மிஸ்ரா அமர்வு ஏற்கனவே வழக்கை விசாரித்து வரும் கோவிந்தன் மற்றும் நாரிமன் அமர்வு திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இருந்தால் இடைக்கால மனுவை எடுத்து கொள்வதாக தெரிவித்தது.
இது தவிர விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள் தனித்தனியாக மனுதாக்கல் இடைக்கால மனுவை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இடைக்கால மனுவை அபிஷேக் சிங்வீ , அரிமா சுந்தரம் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி மனு செய்ய வேண்டுமானால் எதிர் தரப்பிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னிச்சையாக நீதிபதிகளிடம் ஆஜராகி முறையிட்டுள்ளனர், இது நீதிமன்ற மரபுக்கு எதிரானது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் யோகேஸ்வரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு நீதிபதிகள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவிட்டனர். தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை இரவு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த வழக்காக இருந்தாலும் தங்களை கருத்து கூற இணைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இது தவிர 70 கேவியட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை செய்யும் போது கேவியட் மனு மீதான கருத்துக்களை கேட்டுத்தான் இந்த விசாரணையில் தீர்ப்பு வரும். ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர்ந்தது என்று நம்பும் நிலையில் இப்போது திடீரென மீண்டும் பிரச்சனையை கிளப்பி உள்ளது தமிழகத்தின் அமைதியை குலைக்கும் செயலாகும்.
