- Home
- Tamil Nadu News
- அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சில நிர்வாகிகளை நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக- பாஜக இருவரும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இதில் வேறு எந்த கட்சி இணையப்போகிறது. அதேபோல் தமிழக அரசியல் களத்தை அதிர வைத்து வரும் விஜயின் தவெக கட்சியில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக பாஜகவுடன் சேர்ந்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை ஏ.ஏ.கலையரசு ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
புதிய நிர்வாகி நியமனம்
எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம்.இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

