தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இப்போராட்டம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் வீறு கொண்டு பரவி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, துத்துக்குடி,ஈரோடு என அனைத்துப் பகுதிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜல்லிகிகட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சேவல் சண்டைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. தேனி அருகே இன்று சேவல் சண்டை நடைபெற்றது. 10 க்கும் மேற்பட்ட சேவல்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. வெற்றி பெற்ற சேவல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேவல் சண்டை நடைபெற்றபோது போலிசார் வந்து தடுத்தால் அதையும் மீறி போட்டிகளை நடத்தியே தீருவோம் என அப்பகுதி மக்கள் சவால் விடுத்தனர்.