அடுத்த ஆண்டு ஓபிஎஸ் தலைமையில்தான் அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு…சோழவந்தான் எம்எல்ஏ உறுதி..
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்திய போது ஓபிஎஸ்க்கு முதலில் ஆதரவு குரல் கொடுத்தவர் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம்தான்.
ஓபிஎஸ் முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்தார். அவரின் போராட்டங்களில் மாணிக்கம் எப்போதும் துணையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த தொகுதியான சோழவந்தானுக்கு அவர் நேற்று வந்த போது பொது மக்களும், அதிமுக தொண்டர்களும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர், பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் அவருக்கு ஆதரவு அளித்தனர்,
கட்சி நிர்வாகிகள்,விவசாய சங்கத்தினர்,வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் என வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் மாணிக்கம் நன்றி கூறினார்.பின்னர் அலங்காநல்லுர் சென்ற அவருக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களிட்ம் பேசிய மாணிக்கம், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தவர் ஓபிஎஸ் தான் என்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜல்லிக்கட்டு நாயகனான ஓபிஸ் தலைமையில் நடைபெறும் என உறுதியுடன் தெரிவித்தார்.
