உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருந்தது. இந்தாண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளதால், பதற்றமும் நிலவுகிறது.

இந்நிலையில் நாகூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக களையை கொண்டு வந்த இந்திய தேசிய லீக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இந்திய தேசியலீக் கட்சி சார்பில் தடையை மீறி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இந்திய தேசிய லீக் கட்சியினர் அறிவித்தபடி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக நாகை மாவட்டம் போலகம், கூத்தாடிதோப்பு பகுதியில் இருந்து ஒரு காளையை, மினி வேனில் ஏற்றி வந்தனர்.

நாகூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மினிவேனை சுற்றி வைளத்து மறித்து நிறுத்தினர். பின்னர், அதில் வந்த காளை மாட்டை சிறை பிடித்தனர். இதைதொடர்ந்து அங்கு வந்த இந்திய தேசிய லீக் கட்சியினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

பின்னர் போலீசார், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அத்தாவுல்லா உள்பட 23 பேரை கைது செய்தனர்.