இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு… களத்தில் காளைகளும், காளையர்களும்…
தமிழக அரசு இயற்றிய சட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரசித்திபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெறுகிறது.இதில் பங்கேற்க 900 காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக, ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலும் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோயில் முன்புள்ள திடலில், வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரம் களைகட்டியுள்ளது. ஊர் முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டு மக்கள் உற்சாக நிலையில் உள்ளனர். இனிமேல் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காத? என்ற நிலை இருந்து வந்தது.
தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்து 2 ஆண்டுகளுக்கும் பின் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். .
ஏற்கனவே கடந்த 4 நாட்களாக மருத்துவக் குழுவினர் முகாமிட்டு, காளைகளை பரிசோதித்து, சான்றிதழ்களை வழங்கினர். இன்று மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன.
வாடிவாசல் பகுதி, காளைகள் நிறுத்தப்படும் இடம், பார்வையாளர்கள் பகுதி, தடுப்பு வேலிகள் மற்றும் பாதுகாப்பு என ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதோ களத்தில் காளைகளும்,காளையர்களும்…
அவனியாபுரத்தைத் தொடர்ந்து பாலமேட்டில் 9-ம் தேதியும், உலக பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 10-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
