தடையை மீறி ஜல்லிக்கட்டு? அலங்காநல்லூரை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்..

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால் அலங்காநல்லுரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தகவல் பரவியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டு திரைப்பட இயக்குநர் கௌதமன் காயமடைந்தார்.

இதே போன்று மதுரை பாலமேடு,ஆலங்குளம், முடக்கத்தான், அரிட்டாபட்டி என பல்வேறு இடங்களில் நேற்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும்மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் அலங்காநல்லுரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

இங்கு இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடி வருகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இன்று அதிகாலையிலிருந்தே அலங்காநல்லூரை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.அந்த ஊரைச் சேர்ந்த சாமி காளைகளை வாடிவாசல் அருகே கொண்டு வந்த பூஜை செய்தனர். அந்த நேரத்தில் சில இளைஞர்கள் போலீசார் கண்களில் மண்னைத் தூவி சில காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால் உற்சாகமடைந்த மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டி அடக்கினர். நேரம் ஆக ஆக அலங்காநல்லூரில் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.